நெல்லுக்கான கொள்முதல் மானியம் வழங்க கோரிக்கை
பாகூர் : பட்ஜெட்டில் அறிவித்தபடி நெல்லுக்கான கொள்முதல் மானியம் கிலோவிற்கு 2 ரூபாயை, கொள்முதல் செய்யும் போதே விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என, பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் அறிக்கை;
இந்திய உணவு கழகம், புதுச்சேரி மண்டல கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்வது தொடர்பான விவரங்களை நோட்டீசாக அடித்து வெளியிட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, ஒரு நெல் மூட்டை கூட கன்னிக் கோவில் மார்க்கெட்டிங் கமிட்டி மூலம் கொள்முதல் செய்யப்படவில்லை.
இந்த வருட நிதிநிலை அறிக்கையில் முதல்வர், இந்திய உணவு கழகம் கொள்முதல் செய்யும் நெல் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் உழவர்களுக்கு மானியமாக வழங்கப்படும் என, அறிவித்திருந்தார். அத்திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படுமா என, வேளாண்துறை இயக்குநர் தெளிவுபடுத்த வேண்டும். கன்னிக்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைகூடத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.