புதுச்சேரியில் நுகர்வோர் வழக்குகள் விரைவாக தீர்க்கப்படுகிறது: முதல்வர்
புதுச்சேரி: புதுச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மாநில, மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர், உறுப்பினர்களுக்கான 3 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சன்வே ஓட்டலில் நடந்தது. புதுச்சேரி, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முகாம் நிறைவு விழாவில், சட்ட கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி 5 மாநில நுகர்வோர் ஆணைய தலைவர், உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு சான்றிதழ் வழங்கி பேசுகையில், 'புதுச்சேரியில் மண்டலம், மாவட்ட அளவிலான மன்றங்கள் அமைத்துள்ளோம். இதனால் நுகர்வோர் வழக்குகள் விரைவாக தீர்க்கப்படுகிறது. இது எங்கள் அரசுக்கு கிடைத்த வெற்றி. ரேஷன் கடைகளை திறந்துள்ளோம். இலவச அரசி கொடுக்கப்படவுள்ளது. நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருந்தால், நுகர்வோர் குற்றங்கள் குறையும். நுகர்வோர் சிரமங்களை எளிதாக தீர்த்து நீதி கிடைக்கிறது. சிறிய வழக்காக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கும் போது நுகர்வோர் அரசு மீது நம்பிக்கை ஏற்படும்' என்றார்.
விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர், சுவாமிநாதன், பரத் சக்கரவர்த்தி, தலைமை செயலர் சரத் சவுக்கான், கே.எம்.சி., சட்டக்கல்லுாரி முதல்வர் சவுந்தரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் நன்றி கூறினார்.