'நாட்டின் தேவைகளை மனதில் வைத்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்'

புதுச்சேரி: புதுச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மாநில, மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர், உறுப்பினர்களுக்கு நடந்த 3 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா சன்வே ஓட்டலில் நடந்தது.

முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது;

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் புதுச்சேரி வர்த்தகம், கலாசாரம், மதம் ஆகியவற்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அரசு நாட்டின் தேவைகளை மனதில் வைத்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. நுகர்வோர் புகார்கள் விரைவாகவும், குறைந்த செலவில் தீர்க்க விதிமுறைகள் எளிமையாக்கி உள்ளது.

தவறான விளம்பரங்கள் இச்சட்டத்தின் கீழ் கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. நுகர்வோர் நலனுக்காக செயல்படும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய காலங்களில், கட்டடதாரர்களிடம் இருந்து வீடுகளை பெற நுகர்வோர் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. நில அளவைப்பற்றி தெளிவான விவரங்களும் இல்லை. ஆனால் தற்போது ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட டெவலப்பர்கள் மட்டுமே தேவையான ஒப்புதல்களைப் பெற்ற பிறகே பணிகளைத் தொடங்க முடியும்.

சந்தையில் இருந்து குறைபாடுள்ள பொருட்களை மீண்டும் வாபஸ் பெறுவது, சேதம் ஏற்பட்டால் நுகர்வோருக்கு இழப்பீட்டை வழங்குவது உள்ளிட்ட விதிகள் இதில் அடங்கும்.

பல தனியார் நிறுவனங்கள் அரசு தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் 40 சதவீத புகார்கள் நேரடியாக நிறுவனங்களுக்கு அனுப்படுகிறது. இது அதிவேக தீர்வுக்கு வழிவகுக்கிறது' என்றார்.

பயிற்சியில் பங்கேற்ற ஆணைய தலைவர், உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement