டில்லி முதல்வர் அதிஷி பற்றி அவதூறு; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ., வேட்பாளர்

1

புதுடில்லி: பிரியங்கா குறித்து சர்ச்சை கருத்து கூறி மன்னிப்பு கேட்டுக் கொண்ட டில்லி பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் பிதுரி, டில்லி முதல்வர் அதிஷி குறித்து பேசியது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.


டில்லியின் கல்கஜி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., சார்பில் போட்டியிடும் ரமேஷ் பிதுரி, ' நான் வெற்றி பெற்றால், பிரியங்காவின் கன்னம் போல் சாலை அமைத்து தருவேன்', எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதற்கு காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட ரமேஷ் பிதுரி, "இதற்கு முன்னரும், இதுபோன்ற கருத்துகள் கூறப்பட்டு உள்ளன. லாலு சொன்னதை போலத் தான் நானும் சொன்னேன். அப்போது, லாலு மத்திய அமைச்சராக இருந்ததால், காங்கிரஸ் அமைதி காத்தது. எனது வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன், எனக் கூறினார்.


இந்த சர்ச்சை அடங்குவதற்குள், டில்லி முதல்வர் அதிஷி குறித்து ரமேஷ் பிதுரி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "ஊழல் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கெஜ்ரிவால் கூறி வருகிறார். டில்லி முதல்வர் அதிஷி தனது தந்தையை மாற்றி விட்டார். முன்பு அதிஷி மர்லேனாவாக இருந்த அவர் தற்போது அதிஷி சிங்காக மாறியுள்ளார். இதுதான் அவருடைய குணம்", என ரமேஷ் பிதுரி கூறினார்.


அவரது இந்தக் கருத்திற்கு, ஆம்ஆத்மி கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "பா.ஜ., தலைவர்கள் டில்லி முதல்வர் அதிஷி ஜியை களங்கப்படுத்தி வருகின்றனர். டில்லி பெண்கள் இதனை சகித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். டில்லியில் உள்ள அனைத்து பெண்களும் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்", எனக் குறிப்பிட்டுள்ளார்.


தப்பித் தவறி ரமேஷ் பிதுரி எம்.எல்.ஏ.,வானால், சாதாரண பெண்களின் நிலைமையை யோசித்து பாருங்கள் என்று ஆம்ஆத்மி கூறியுள்ளது.

Advertisement