சுற்றுலா பயணியர் விரும்பும் சொக்கர் முடிமலை டிரெக்கிங்
மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக மாறியுள்ள சொக்கர் முடிமலைக்கு, 'டிரக்கிங்' சென்ற வகையில் கடந்த டிசம்பரில் வனத்துறையினருக்கு 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
மூணாறில் சமீபகாலமாக சாகச சுற்றுலாவுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அதற்கு 'ஜிப் லைன்' உட்பட பல்வேறு சாகச அம்சங்கள் உள்ள போதும், 'டிரக்கிங்' செல்வதை சுற்றுலாப் பயணியர் மிகவும் விரும்புகின்றனர். அதற்கு ஏற்ற இடமாக சொக்கர்முடி மலை மாறியுள்ளது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் இருந்து 12 கி.மீ., சென்றால் கேப் ரோடு பகுதியை அடையலாம்.
அங்கிருந்து அரை மணி நேரம் மலை மீது நடந்து, 2695 மீட்டர் உயரம் உள்ள சொக்கர்முடி மலையை அடையலாம்.
அங்கிருந்து சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றையும், சொக்கர்முடி மலையின் தாழ்வான பகுதியில் பச்சை பசேல் என பரந்து கிடக்கும் தேயிலை தோட்டங்கள், பைசன்வாலி, ராஜாக்காடு, குஞ்சுதண்ணி ஆகிய பகுதிகளின் விளை நிலங்கள், பொன்முடி, கல்லார்குட்டி, ஆனயிறங்கல் ஆகிய அணைகளின் அழகையும் கண்டு ரசிக்கலாம்.
அப்பகுதிக்கு வனத்துறையினரால் தினமும் மூணாறு அலுவலகத்தில் இருந்து, டிரக்கிங் அழைத்து செல்லப்படுகின்றனர்.
கடந்த டிசம்பரில் மட்டும் 897 பயணியர் 'டிரக்கிங்' சென்றனர். அதன் மூலம் 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ஒரு நபருக்கு உள் நாட்டினருக்கு 400, வெளிநாட்டினருக்கு 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.