அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசுவது ஜாதியை சொல்லி திட்டுவது தான் திராவிட மாடல்: மதுரையில் எச்.ராஜா புது விளக்கம்

3

மதுரை; ''உடன் இருக்கும் அரசு அதிகாரியை தரக்குறைவாக பேசுவது, ஜாதியை சொல்லி திட்டுவது, மனுவை சுருட்டி மக்கள் தலையிலேயே அடிப்பது தான் திராவிட மாடல். இம்மாடலில் சமூக நீதி, சமத்துவம் கிடையாது,'' என, மதுரையில் பிராமணர்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது: ஜெர்மனியில் யூதர்கள் எவ்வாறு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனரோ, அதுபோல் தமிழகத்தில் பிராமண சமூகத்தினரை 'திராவிட மாடல்' அரசு நடத்துகிறது. அவர்களை பாதுகாக்க அனைத்து சமூகத்தினரும் குரல் கொடுக்க வேண்டும்.

1957ல் தஞ்சையில் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் 'தமிழ் பிராமணர்களை கொல்ல வேண்டும்' என ஈ.வெ.ரா., பேசினார். அதைக்கண்டித்து மறுநாளே அன்றைய பிரதமர் நேரு அன்றைய முதல்வர் காமராஜருக்கு கடிதம் எழுதினார். சமூக விரோதிகளே இவ்வாறு பேச முடியும். சமீபத்தில் திருநெல்வேலியில் பூணுால் அறுப்பு நடந்தது.

தமிழகத்தில் இரு முக்கிய பிரச்னைகளாக போதை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளன. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தவறான செய்தி பதிவிட வேண்டாம் என டி.ஜி.பி., கூறுகிறார். இந்த உத்தரவு மக்களுக்கு மட்டுமா சென்னை கமிஷனர் அருணுக்கும் பொருந்துமா என விளக்க வேண்டும்.

'குற்றத்தில் ஈடுபட்டவர் ஒருவரே' என ஏற்கனவே அருண் தீர்ப்பு வழங்கி விட்டார். தற்போது அதை விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று பெண் அதிகாரிகள் குழு, ஞானசேகரன் தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் எனக்கூறுகிறது. விசாரணைக்கு முன்பே கமிஷனர் அருண் எவ்வாறு முடிவுக்கு வந்தார். தமிழக போலீசாரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு உட்பட்டதாக உள்ளது. பல்கலை செனட் உறுப்பினரான துணை முதல்வர் உதயநிதி ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை.

கள்ளக்குறிச்சியில் பால் வழங்க சென்ற பெண் போதை நபர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் 'டிவி'யில் தினமும் 'தகப்பனாக சொல்கிறேன்... போதைக்கு இடம் கொடுக்காதீர்கள்' என்கிறார். ஆனால் முதல்வராக இளைஞர்களுக்கு சங்கில் சாராயம் ஊற்றுகிறார்.

அனைத்து சமுதாயத்தினரும் வேற்றுமை பார்க்காமல் நம் குழந்தைகளை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும்.

'ஒழுக்கமான வாழ்க்கை தேவையில்லை' என பேசியவர்கள்தான் இன்று திராவிட தலைவர்களாக உள்ளனர். தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது. 'தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் இருக்கிறோம்' என தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூ., கட்சி மாநில செயலாளராக இருந்த பாலகிருஷ்ணன் சொல்கிறார். இதைவிட வெட்கக்கேடு 'திராவிட மாடல்' அரசுக்கு தேவையில்லை. முதல்வர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

Advertisement