தி.மு.க., ஓட்டை கப்பல்: செல்லுார் ராஜூ
மதுரை; ''தி.மு.க., ஓட்டை கப்பலாகி விட்டது. எந்த மாலுமியாலும் இனி அதை கரைசேர்க்க முடியாது,'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் அறிவிக்கப்படாத 'எமர்ஜென்சி' அமல்படுத்தப்பட்டுள்ளதா என அடுக்கடுக்காக கேள்விகளை மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளராக இருந்த பாலகிருஷ்ணன் எழுப்பினார். தி.மு.க., தரப்பில் மழுப்பலான பதில் அளிக்கப்பட்டுள்ளது.
'வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம்' என அமைச்சர் சேகர்பாபு, பாலகிருஷ்ணனை விமர்சித்துள்ளார். இதன் மூலம் கம்யூனிஸ்ட்டை தி.மு.க., எந்த இடத்தில் வைத்திருக்கிறது என புரிகிறது.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பலாத்கார விவகாரத்தில் ஞானசேகரன் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறார் என போலீஸ் கமிஷனர் அருண் கூறியதன் பின்னணிக்கு தி.மு.க., அழுத்தம் தான் காரணம்.
இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியை அடுத்து கம்யூனிஸ்ட்டும் வலியுறுத்தியுள்ளது.
'சர்வாதிகாரியாக மாறி சவுக்கால் அடிப்பேன்' என முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தான் சவுக்கால் அடித்துக் கொண்டார்.
தி.மு.க., கூட்டணியில் பயணம் செய்பவர்கள் மக்களின் எதிர்ப்பலைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தமிழகத்தின் நம்பிக்கையாக பழனிசாமி உள்ளார். மக்கள் பிரச்னையை தட்டிக் கேட்கும் வல்லமை அவருக்கு உண்டு என்றார்.