சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர்; போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்து, வாகன ஊர்வலம் நடத்தி, வாகன ஓட்டிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்பட்டது.

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் துவக்க விழா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 100 டூவீலர், கார்களில், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.

கலெக்டர் கிறிஸ்துராஜ், கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கிவைத்தார். ஆர்.டி.ஓ.,க்கள் (வட்டார போக்குவரத்து அலுவலர்கள்) ஜெயதேவராஜ், ஆனந்த் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

'சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டாதீர். டூவீலரில் இருவருக்கு மேல் பயணிக்க கூடாது. மொபைல் போன் பேசியபடியும், ஹெல்மெட் அணியாமலும் வாகனம் ஓட்டக்கூடாது; குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது' என, விழிப்புணர்வு வாசகங்கள் பொறித்த பதாகைகளை வாகனங்களில் கட்டிக்கொண்டு, ஊர்வலமாக சென்றனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்வலம், தென்னம்பாளையம், மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று திரும்பி, பல்லடம் ரோட்டில் வித்யாலயம், வீரபாண்டி பிரிவு, நொச்சிபாளையத்திலுள்ள தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அம்சங்கள் அடங்கிய நோட்டீஸ், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

விழிப்புணர்வில் விதிமீறல்



டூவீலர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது விதிமுறை. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில், ஏழு டூவீலர்களில் இருவர் பயணித்தனர்.

இதில், ஆறு டூவீலர்களில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஹெல்மெட் அணியவில்லை. அதேபோல், ஒரு காரில் டிரைவருக்கு அருகில் அமர்ந்து பயணித்த பெண், சீட்பெல்ட் அணியவில்லை.

ஐந்து பேர், புதிய டூவீலர்களில் பயணித்தனர்; அந்த வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்தப்படவில்லை.விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் ஊர்வலத்திலேயே இதுபோன்று விதிமுறைகள் பின்பற்றப்படாதது, தவறான முன்னுதாரணமாகிறது.

வரும் நாட்களில், இத்தகைய தவறுகள் நேராதவாறு போக்குவரத்து துறையினர் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisement