மாணவி விவகாரத்தில் ஆதாய அரசியல்; பிளேட்டை திருப்பிப்போட்ட திருமா

30



சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்துடன் செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

'பாலியல் புகார் விவகாரத்தில், அரசு தரப்பில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என முதன் முதலில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய திருமாவளவன், 'இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஞானசேகரன், பாதிக்கப்பட்ட மாணவி முன் போனில் பேசும்போது, சார் என குறிப்பட்டது எந்த சாரை?' எனக் கேட்டும் பிரச்னையை கிளப்பி இருந்தார்.



தற்போது இந்த விவகாரத்தில் போராடும் எதிர்கட்சியினர் ஆதாய அரசியல் செய்வதாக, திடுமென பிளேட்டை திருமா மாற்றிப் போடுகிறார்.

உணர்வுகளை மதித்து



முதல்வர் ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து பேசிய பின், திருமாவளவன் அளித்த பேட்டி:


வி.சி., பொதுச்செயலர் எழுத்தாளர் ரவிகுமாருக்கு இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் விருதை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதற்காக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.


தமிழகத்தின் உணர்வு களை மதித்து, கவர்னர் நடந்து கொள்ள வேண்டும்.

தமிழக சட்டசபையில் தேசிய கீதமும், அரசியலமைப்பு சட்டமும் அவமதிக்கப்பட்டு விட்டதாக கவர்னர் ரவி அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அப்படியொரு உள்நோக்கத்துடன் தமிழக அரசு செயல்பட வேண்டிய தேவை இல்லை.



கவர்னரின் போக்கு, சட்டசபை மரபுகளை அவமதிக்கும் செயலாக உள்ளது. சராசரி அரசியல்வாதியை போல செயல்படும் கவர்னர் ரவியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.


சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, இதை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

அரசியல் நாகரிகம்



இது, பாதிக்கப்பட்ட மாணவிக்கே எதிரானது. இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது.



சிறப்பு புலனாய்வு குழுவை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. அதன் பின்னும், தமிழக அரசு மீது திரும்ப திரும்ப குற்றம் சுமத்துவது, எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆதாய நோக்கத்தையே காட்டுகிறது.


ஆளும் கூட்டணியில் உள்ள வி.சி., கட்சி, எதிர்க்கட்சியைப்போல செயல்பட முடியாது; தோழமை கட்சியாகத்தான் செயல்பட முடியும். அதுதான் அரசியல் நாகரிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement