என்ன ஒரு அதிசயம்: தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு!

26


சென்னை: எதிர்க்கட்சியினர் விமர்சனம் காரணமாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாலும், கவர்னரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் மீது தமிழகம் முழுவதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து, பா.ஜ.,- பா.ம.க., -அ.தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி, நேற்று (ஜன.,07) தமிழகம் முழுவதும் தி.மு.க., வினர் போராட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி கொடுத்தது எப்படி என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். ஆனால் பா.ம.க.,வினர் ஒரு படி மேலே சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


'கவர்னருக்கு எதிராக ஆளும் கட்சியினர் நடத்தும் போராட்டத்துக்கு அனுமதியளித்து விதிமீறலில் ஈடுபட்ட, மாநகர போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ம.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்நிலையில், கவர்னரை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சியினர் விமர்சனத்தை எதிர்கொள்வதற்காகவும், உயர் நீதிமன்றத்தில் பதில் சொல்வதற்கு வசதியாகவும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement