ஒரே நாடு ஒரே தேர்தல்; இன்று கூடுகிறது முதல் பார்லி கூட்டுக்குழு; முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு
புதுடில்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக, முதல் ஆலோசனை கூட்டத்தை இன்று (ஜன.,08) பார்லி கூட்டுக்குழு நடத்துகிறது. கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா டிச.17ம் தேதி லோக்சபாவில் தாக்கலானது. யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவும் அன்றே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா பார்லி. கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
மொத்தம் 39 உறுப்பினர்கள் கொண்ட பார்லி. கூட்டுக்குழு இன்று (ஜன.,08) முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. கூட்டம் காலை 10.30 மணிக்கு கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்தும், அதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்ககூடிய பலன்கள் குறித்தும் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்க உள்ளனர்.
பார்லி. கூட்டுக்குழுவில் 12 ராஜ்யசபா உறுப்பினர்கள், 27 லோக்சபா உறுப்பினர்கள் என மொத்தம் 39 பேர் உள்ளனர். காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா குழுவின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.