ஒருங்கிணைந்த கல்வி நிதி ரூ.2,152 கோடி; மத்திய அரசிடம் தமிழகம் எதிர்பார்ப்பு

13



சென்னை : ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், மத்திய அரசு 2,152 கோடி ரூபாயை வழங்காததால், மாநில அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவுவால் வாசிக்கப்பட்ட கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளதாவது:



மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில், மாநில அரசு உறுதியுடன் செயல்படுகிறது. மாநிலத்தின் முயற்சிகளுக்கு தேவையான ஆதரவை மத்திய அரசு வழங்கவில்லை.

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்கக்கோரி தொடர்ந்து முறையிடப்பட்டது.

கணக்கெடுப்பு



புதிய கல்வி கொள்கையை தமிழகம் ஏற்காததை காரணமாக கூறி, மத்திய அரசு நடப்பாண்டில் இதுவரை, எந்தவொரு நிதியையும் விடுவிக்கவில்லை. மொத்தம் 2,152 கோடி ரூபாய் நிலுவை உள்ளது.



இது, ஆசிரியர்களின் ஊதியம், பள்ளி கட்டடங்களை பராமரித்தல், கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கல்வி கட்டணத்தை திருப்பி செலுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளின் பல்வேறு செயல்பாடுகளுக்கு, மிகவும் இன்றியமையாததது.


மத்திய அரசு நிதியை வழங்காததால், மாநில அரசு தன் சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து, இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்த செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. இதனால், மாநில அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும், 44 லட்சம் மாணவர்கள், 2.20 லட்சம் ஆசிரியர்கள், 21,276 பணியாளர்களின் எதிர்காலமும், இந்த நிதி உரிய நேரத்தில் விடுவிக்கப்படுவதையே சார்ந்துள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி, மத்திய அரசு இந்த நிதியை விரைவில் விடுவிக்கும் என, மாநில அரசு நம்புகிறது

 அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள், தகுதியானவர்களை சரியாக சென்றடைவதன் வாயிலாகவே, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க இயலும்.

அத்தகைய விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதற்கான இலக்குகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை தீட்டுவதற்கு தேவையான, அடிப்படை ஆதாரங்களை திரட்ட, தேசிய அளவிலான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.

பெரும் சேதம்



எனவே, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே துவக்க வேண்டும். அத்துடன், ஜாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமரிடம் முன்வைத்த வேண்டுகோள் அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, 50 சதவீத பங்கு தொகை வழங்க, மத்திய அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது.



மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்


சமீபத்தில், 14 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய பெஞ்சல் புயலால், 40 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பொது மக்களின் சொத்துக்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நிதிக்குழுவுக்கு பாராட்டு



இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா, 2,000 ரூபாய் மாநில அரசால் வழங்கப்பட்டது. தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரண பணிகளையும், மறுசீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள கூடுதல் நிதி தேவை. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநில அரசு கேட்டுள்ள 6,675 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்



டாக்டர் அரவிந்த பனகாரியா தலைமையிலான, 16வது நிதிக்குழு தமிழகம் வந்தபோது, நம் கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன. மாநிலங்களுக்கான நிதி பகிர்வை, 50 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் அறிக்கை குறித்து நிதிக்குழு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தது. தமிழக அரசால் கோடிட்டு காட்டப்பட்டுள்ள முற்போக்கான வழிமுறைகளை, நிதிக்குழு பரிந்துரைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement