போராட்டங்களை கண்டு தி.மு.க., அஞ்சுகிறது: பா.ம.க., - பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பேட்டி
சென்னை: 'ஜனநாயக போராட்டங்களை கண்டு, தி.மு.க., அஞ்சுகிறது' என, சட்டசபை பா.ம.க., குழு தலைவர் ஜி.கே.மணி, சட்டசபை பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
சட்டசபையில் அவர்கள் அளித்த பேட்டி:
ஜி.கே.மணி: அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை விவகாரத்தில், தி.மு.க., அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து ஜனநாயக ரீதியாகப் போராட, அரசியல் கட்சிகளுக்கு உரிமை இருக்கிறது.
வலியுறுத்தல்
ஆனால், அனுமதி மறுக்கப்படுகிறது. தி.மு.க., அரசை, அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே விமர்சனம் செய்துள்ளது. அந்த அளவுக்கு தான் தி.மு.க., அரசு
செயல்படுகிறது. சட்டசபையில் பேசுவதற்கும், போராடவும் அனுமதி இல்லை.
ஜனநாயக போராட்டங்களை கண்டு தி.மு.க., அஞ்சுகிறது. இதை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
நயினார் நாகேந்திரன்:அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்.
ஏற்கனவே, 18 வழக்குகள் உள்ள நிலையில், அவர் மீது முன்னரே நடவடிக்கை எடுக்காதது ஏன். இந்த விவகாரத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்த கருத்துக்கள் கேலிக்குரியதாக உள்ளன.
'யார் அந்த சார்?' என்பது தான், இன்று அனைவரது கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தை, தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
திட்டமிட்டு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமையாக இது தெரிகிறது. இந்த வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். இதை வலியுறுத்தி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி: சட்டசபையில் கவர்னர் தன் உரையை துவங்கும் முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், அவரை பேச விடாமல் கோஷமிட்டனர்.
அப்போது, தேசிய கீதத்தை இசைக்குமாறு, கவர்னர் திரும்ப திரும்ப வலியுறுத்தினார். ஆனால், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. அதனால், கவர்னர் ரவி வெளிநடப்பு செய்தார்.
நாடகம்
சட்டசபையில நடந்த உண்மைகள் வெளியே வரக்கூடாது என, தி.மு.க., அரசு நினைக்கிறது. இது, எமர்ஜென்சி காலத்தை நினைவுப்படுத்துகிறது.
இதுதான் பத்திரிகை சுதந்திரமா என்பதை, தி.மு.க., அரசு தான் சொல்ல வேண்டும். சட்டசபையில் எத்தனையோ மரபுகள் மீறப்படுகின்றன.
தேசிய கீதம் பாடும்போது மட்டும் மரபு வந்து விடுகிறதா; தேசிய கீதத்தை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே, திட்டமிட்டு சட்டசபையில் நாடகம் நடத்தியிருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.