ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு இல்லாதது சமூக அநீதி: ராமதாஸ்

13



சென்னை: 'கவர்னர் உரையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு இல்லாதது சமூக அநீதி' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:



தமிழகத்தில் கவர்னர் இல்லாமலேயே கவர்னர் உரை படிக்கப்பட்டிருக்கிறது. உரையை படிக்க வந்த கவர்னர், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறி வெளிநடப்பு செய்திருப்பதை ஏற்க முடியாது. சபாநாயகரால் படிக்கப்பட்ட கவர்னர் உரையில், தமிழ கத்தின் வளர்ச்சிக்கான எந்த முக்கிய அறிவிப்பும் இடம் பெறாதது, பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான அறிவிப்பு, கவர்னர் உரையில் இடம்பெறாதது, மிகப்பெரிய துரோகம்; சமூக அநீதி.



மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லுாரி என்ற இலக்கை எட்ட, இன்னும் ஆறு மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க வேண்டும். அது குறித்த அறிவிப்பு, கவர்னர் உரையில் இல்லை.

'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று சொல்வர். அதன்படி பார்த்தால், தமிழக அரசு என்ற சட்டியில் எதுவும் இல்லாததால், கவர்னர் உரை என்ற அகப்பையில் எதுவும் வரவில்லை.



தமிழக நலனில் தி.மு.க., அரசுக்கு அக்கறை இருக்குமானால், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது, மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement