முடிந்தது ஊராட்சி தலைவர்கள் பதவி திரும்பப் பெறப்பட்ட 31 ஆவணங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 31 வகை ஆவணங்கள் திரும்பப் பெறப்பட்டது.
பணப்பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக தலைவர்கள், துணைத் தலைவர்களின் அலைபேசிகளுக்கு ஒ.டி.பி. வரும் வசதியும் லாக் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளில் தங்கள் பதவி காலம் முடியும் சூழல் நெருங்கிய நிலையில் கடந்த ஒரு மாதமாகவே மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் அதன் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் அலுவலகத்திற்கு வருவதை குறைத்துக் கொண்டனர்.
இருந்தபோதிலும் ஊராட்சிகளில் நடக்கும் பராமரிப்பு பணிகள், வளர்ச்சி பணிகளுக்கு ஆவணங்களில் கையெழுத்திட மட்டும் வந்து சென்றனர். தலைவர்கள், துணைத் தலைவர்கள் அலைபேசி எண்கள் பண பரிமாற்றத்திற்காக உள்ளாட்சி அமைப்புகளில் லிங்க் செய்யப்பட்டு, அதற்காக ஓ.டி.பி. வரும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜன. 5 மாலையுடன் பதவி காலம் முடிவடைந்ததால் , அந்த வசதியும் லாக் செய்யப்பட்டது.
மேலும் ஊராட்சிகளில் பராமரிக்கும் 31 வகை ஆவணங்கள், மினிட் புக்குகள் உட்பட அனைத்து ஆவணங்களும் அவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது. தங்களிடம் இருந்த ஆவணங்களை ஊராட்சி செயலர்களிடம் ஒப்படைத்து கண்ணீர் மல்க தலைவர்கள், துணைத் தலைவர்கள் விடை பெற்றனர்.