வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டிற்கு வர மறுக்கும் பஸ்கள்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி, மகாராஜபுரம், கோட்டையூர், ஆயதர்மம், இலந்தைகுளம் பகுதிகளில் இருந்து வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்ட்டிற்கு பஸ்கள் செல்ல மறுப்பதால் அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு நடந்து செல்ல வேண்டிய சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வத்திராயிருப்பிலிருந்து கூமாபட்டி செல்லும் ரோட்டில் பஸ் ஸ்டாண்டை சுற்றி அரசு மருத்துவமனை ,தாலுகா அலுவலகம், அரசு பஸ் டிப்போ, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நீதிமன்றம் என பல அலுவலகங்கள் உள்ளது. இதனால் தினமும் ஏராளமான மக்கள் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கான்சாபுரம், நெடுங்குளம், கூமாபட்டி செல்லும் பஸ்கள் மட்டுமே பஸ் ஸ்டாண்டிற்கு செல்கிறது.
ஆனால், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோட்டையூர், ஆயதர்மம், இலந்தைகுளம் பகுதிகளில் இருந்து வத்திராயிருப்பு வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் முத்தாலம்மன் பஜாரில் பயணிகளை இறக்கிவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறது. இதேபோல் விருதுநகர், தேனி, திருமங்கலம் பகுதிகளில் இருந்து வரும் அரசு, தனியார் பஸ்களும் முத்தாலம்மன் பஜாரிலேயே நின்று விடுகிறது.
இதனால் அரசு மருத்துவமனைக்கு மக்கள் நடந்து செல்லும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் கூடுதல் சிரமத்திற்கும், பண விரயத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.
எனவே, விருதுநகர், மதுரை, திருமங்கலம், பேரையூர், கோட்டையூர், ஆயதர்மம், இலந்தைகுளம் பகுதிகளிலிருந்து வரும் அனைத்து பஸ்களும் வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்ப பேரூராட்சி நிர்வாகமும், போக்குவரத்து கழக நிர்வாகமும், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.