அழகாபுரி - நான்கு வழிச்சாலையில் 19 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் நாகர்கோவில் மண்டலத்திற்கு உட்பட்ட அழகாபுரியிலிருந்து ராஜபாளையம் வரை உள்ள 36 கிலோ மீட்டர் தூர நான்கு வழிச்சாலையில் 19 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டுள்ளது
மதுரை மாவட்டத்தையும், கேரள மாநிலத்தையும் இணைக்கும் வகையில் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்ட எல்லை வரை மேம்பாலங்கள் முழு அளவில் முடியாமல் உள்ளது.
அதே நேரம் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் இருந்து அழகாபுரி வரை ரோடுகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி தான் முடிவடைய வேண்டியதுள்ளது. இங்கும் இன்னும் ஓரிரு வாரங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி துவங்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில் மண்டலத்துக்கு உட்பட்ட ராஜபாளையம் தெற்கு நங்கநல்லூர் முதல் அழகாபுரி வடுகப்பட்டி வரை 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையின் மையப்பகுதியிலும், இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இதன்படி நான்கு வழிச்சாலையின் மையப்பகுதியில் காகிதப்பூ, தங்க அரளி, மகிழம்பு, மயில் கொன்றை, இட்லி பூ என 9 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் ரோட்டில் இருபுறமும் கொன்றை, புங்கம், வேம்பு, பூவரசு, நாவல், நீர்மருது என 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு தற்போது 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் முழு அளவில் மரக்கன்றுகள் நடும் பணி முடிவடையும்.
முழு அளவில் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும்போது ராஜபாளையத்தில் இருந்து அழகாபுரி வரை 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 அடிக்கு ஒரு மரங்கள் வீதம் வளர்ந்து பசுமைவழிச் சாலையாக உருவாகும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத் துறை அதிகாரி வேல்ராஜ் தெரிவித்தார்.