கதிர் இருக்கு, விதையில்லை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சுற்று கிராமங்களில் மக்காச்சோள பயிர்கள் கதிர்கள் வந்த நிலையில் உள்ளே விதைகள் இல்லாததால் விவசாயிகள் சோதனையை சந்தித்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கட்டக்கஞ்சம்பட்டி, ராமசாமிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. பயிர் நன்கு விளைந்த நிலையில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் உள்ளே புகுந்து ஏக்கர் கணக்கில் பயிர்களை பாழாக்கி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

ஒருவழியாக போராடி பயிர்களை காப்பாற்றி வந்த நிலையில், நன்கு விளைந்த சோள கதிரில் உள்ளே விதை இல்லாமல் வெறும் கதிராக வளர்ந்து இருப்பதை கண்டு விவசாயிகள் அதிர்ந்து போய் உள்ளனர். கடன் வாங்கி ஏக்கருக்கு பல ஆயிரங்கள் செலவழித்து கடைசியில் வெறும் சோளக்கதிரை பார்த்து விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

இதுகுறித்து வேளாண் உதவி அலுவலர் பெரியகருப்பன்: பருவநிலை மாற்றம், மழை விட்டு விட்டு பெய்தல் போன்றவற்றால் இந்த பிரச்னை ஏற்பட்டு உள்ளது .பூக்கள் வரும் நேரத்தில் மழை பெய்கிற பொழுது கதிர் உள்ளே விதை பிடிக்காது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலை அருப்புக்கோட்டை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்வர்.

Advertisement