திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டில் ரோடு சேதம்
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டில் இரு வாயில்களிலும், ரோடுகள் சேதம் அடைந்திருப்பதால் பயணிகள், பஸ் டிரைவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
திருத்தங்கலில் விருதுநகர் ரோட்டில் 2013 ல் ரூ. 3.69 கோடியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்ட 2016 ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் வணிக வளாகங்கள், சுகாதார வளாகங்கள், பொருட்கள் பாதுகாக்கும் அறை, டிரைவர் நடத்துனர் ஓய்வு அறை, குடிநீர் வசதி, மேல்நிலை குடிநீர் தொட்டி, உயர் கோபுர மின் விளக்குகள் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த பஸ் ஸ்டாண்ட் அதன் பின்னர் பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில் ஐந்து மாதங்களுக்கு முன்பு பஸ் ஸ்டாண்ட் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது தனியார் , அரசு பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றன. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் இரு வாயில்களிலும் நுழைவுப் பகுதியில் ரோடு சேதம் அடைந்துள்ளது. பெரிய பள்ளமாக இருப்பதால் பஸ்கள் தட்டு தடுமாறியே வர வேண்டி உள்ளது. மழை பெய்யும் போதும் மிகவும் சிரமப்பட நேரிடுகிறது. பஸ் ஸ்டாண்டிற்கு வருகின்ற பயணிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் ரோடு சேதத்தால் பயணிகள் எரிச்சல் அடைந்துள்ளனர். எனவே உடனடியாக சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.