'உள்ளூர் பிரச்னைகளுக்கு குரல் கொடுங்க'; அணுகுமுறையை மாற்றியது அ.தி.மு.க.,

4




தமிழக அரசியல் களத்தில், வரும் 2026 சட்டசபை தேர்தலை நோக்கி அனைத்து கட்சியினரும் காய் நகர்த்த துவங்கி விட்டனர்.
வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற வியூகத்தை வகுத்து, தி.மு.க., காய் நகர்த்தி வருகிறது. அதற்கேற்ப, தமிழக அரசு வாயிலாக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி, மக்களை வெகுவாக கவர முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

போராட்டம்



அதேநேரம், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள், தி.மு.க., அரசை அகற்றியே தீர வேண்டும் என வியூகம் வகுத்து செயல்படத் துவங்கி உள்ளன.

இதற்காக, இரு கட்சிகளும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை வெகுவாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. பல்வேறு பொது பிரச்னைகளை மையப்படுத்தி போராட்டம் நடத்த இரு கட்சிகளும் தீர்மானித்துள்ளன.


இதில், உள்ளூர் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் வாயிலாக, ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் மக்கள் தங்களுக்கு ஆதரவாக திரளுவர் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கட்சியினருக்கு ஆலோசனை தெரிவித்து, லோக்கல் பிரச்னைகளை கையில் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதை, மாவட்டச் செயலர்கள் கூட்டத்திலும் கட்சியினருக்கு தெரிவித்து விட்டார்.



அவருடைய உத்தரவுபடி, தமிழகம் முழுதும் கட்சியினர் செயல்படத் துவங்கி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில், தலைவராக இருக்கும் சாந்தி தன் மாமனார், கணவர் பெயர்களில் ஒப்பந்தங்கள் எடுத்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றம் ஆறு வாரத்திற்குள்ளாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த சூழலில், அரசு தரப்பில் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.




இதை லோக்கல் கட்சி யினர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமி கவனத்துக்கு கொண்டு சென்றனர்.



அதை வைத்து போராடுங்கள் என அவர் சொல்ல, பேராவூரணி பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இரு நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தினர்


இதேபோல், தஞ்சாவூர் மாநகராட்சிக்குள் அமைந்திருக்கும் அருளானந்தம்மாள் நகரில், பள்ளிக்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை, மேயர் ராமநாதன் சுய லாபத்துக்காக, மனைப் பிரிவுகளாக மாற்றியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.



கூடவே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு, குப்பை கிடங்கில் முறைகேடு, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை வணிக நோக்கத்துடன் தனக்கு வேண்டியவர்களுக்கு மேயர் வழங்கியுள்ளதையும், கருணாநிதி பெயரில், திருமணம், பொது நிகழ்வு நடத்த அமைக்கப்பட்ட கட்டடத்தை சினிமா தியேட்டராக மாற்றியதையும் கண்டித்து, முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் நாளை போராட்டம் நடத்தப்படும் என, அ.தி.மு.க., அறிவித்துள்ளது.


குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் சாலைகள், குடிநீர் பிரச்னை, மோசமான நிலையில் உள்ள மழைநீர் வடி கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை சரிசெய்யாத மேட்டூர் நகராட்சியையும், சொத்து வரி, கடும் விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு காரணமான தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேட்டையும் கண்டித்தும், மேட்டூர் மாநகராட்சி அருகில் நாளை மறுதினம் மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் அ.தி.மு.க.,வினருக்கு தலைமை உத்தரவிட்டுஇருக்கிறது.

இது குறித்து, தஞ்சாவூர் பகுதி அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:



உள்ளூர் பிரச்னைகளை கையில் எடுத்து, அரசின் அலங்கோல செயல்பாடுகளை மக்களுக்கு வெளிப்படுத்த கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.

முக்கிய பிரச்னை



அதன் அடிப்படையில், திருச்சியில் மாரிஸ் பாலப்பணி ஆமை வேகத்தில் நடப்பதை கண்டித்து சமீபத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

அதுபோல தஞ்சாவூரிலும் போராட்டம் நடத்தி வருகிறோம். இப்படி, ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் முக்கியமான பிரச்னைகளை மையமாக வைத்து போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



- நமது நிருபர் -

Advertisement