எச்.எம்.பி.வி., வைரஸ் குறித்து அச்சம் தேவையில்லை சுகாதாரத்துறை இயக்குனரகம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.எம்.பி.வி., வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

குடும்ப நலவழித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சீனாவில் மனித மெட்டாப் நியூமோ வைரஸ் ( HMPV) நோய் பரவுவது குறித்து ஊடகங்களின் அறிக்கைகளுடன் மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் எச்.எம்.பி.வி., என்பது மற்ற சுவாச வைரஸ் போன்றது. இது குளிர்காலத்தில் பொதுவான குளிர் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை இளையவர்கள், முதியவர்களிடையே ஏற்படுத்துகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்.எம்.பி.வி., பாதிப்பு இல்லை.

மாநிலத்தில் நிலவும் ஜலதோஷம், சுவாச நோய்த்தொற்றுகளின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது. பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள செய்ய வேண்டியவை:

நீங்கள் இருமல் அல்லது தும்மும் போது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடவும். சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் மூலம் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும், காய்ச்சல், இருமல், தும்மல் இருந்தால் பொது இடங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். நல்ல காற்று வசதி உள்ள இடத்தில் இருக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவும், சத்தான உணவை சாப்பிட வேண்டும்.

செய்யக் கூடாதாவை:

டிஷ்யூ பேப்பர், கை குட்டை மறு பயன்பாடு செய்யக்கூடாது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களிடமிம் நெருங்கிய தொடர்பு, துண்டுகள், கைத்தறி போன்றவற்றைப் பகிர்தல், அவர்கள் பயன்படுத்திய கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடுதல் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுய மருந்து எடுக்க கூடாது.

எனவே, எச்.எம்.பி.வி., பரவுவது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement