இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசாருக்கு டி.ஐ.ஜி., உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2024ம் ஆண்டு பதிவான ஒட்டுமொத்த குற்ற வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம் டி.ஐ.ஜி., சத்யசுந்தரம் தலைமையில் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.

சீனியர் எஸ்.பி., கலைவாணன் முன்னிலை வகித்தார். எஸ்.பி.,க்கள் வீரவல்லபன், வம்சீதரெட்டி, ரகுநாயகம், பக்தவச்சலம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதுபோல், பொங்கல் பண்டிக்கைக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கடந்த ஆண்டில் புதுச்சேரி முழுதும் நடந்த குற்ற வழக்குகள் குறித்தும், அதில் எவ்வளவு வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது என, ஆலோசனை நடத்தினர்.

கடந்த 2023ம் ஆண்டை காட்டிலும் 2024ம் ஆண்டு குற்ற வழக்குகளில் விசாரணை முடித்து சாட்சிகள் பதிவு செய்து, 80 சதவீத வழக்குகள் குற்றபத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் அதிகம். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும். புது தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தகவல்களை பரிமாறி கொள்ளும் வசதிகளை பயன்படுத்துங்கள் என தெரிவிக்கப்பட்டது.

டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பேசுகையில், போலீசார்இரவு நேரத்தில்ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். முக்கிய சந்திப்புகளில் வாகன தணிக்கையில் ஈடுப்பட வேண்டும். இரவு நேரத்தில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தால் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

பைக்திருட்டு வழக்கு அதிக அளவில் பதிவாகிறது. பைக் திருட்டு வழக்கில் கைது செய்து சிறைக்கு சென்ற நபர் விடுதலை ஆகி வந்தால், அவர் என்ன வேலை செய்கிறார் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம், தங்களுடையவழக்குகளில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்' என்றார்.

Advertisement