சுப்மன் கில் அவசியமா... * என்ன சொல்கிறார் ஸ்ரீகாந்த்
புதுடில்லி: ''பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்லை நீக்க வேண்டும்,'' என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வீரர் சுப்மன் கில் 22. சொந்தமண்ணில் சிறப்பாக செயல்படும் இவர், அன்னிய மண்ணில் தொடர்ந்து ஏமாற்றுகிறார். சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்சில் 93 ரன் (31, 28, 1, 20, 13) மட்டும் எடுத்தார். இவர் குறித்து, இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முன்னாள் தலைவர், ஸ்ரீகாந்த் 65, கூறியது:
சுப்மன் கில் திறமை குறித்து எல்லோரும் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து ஏமாற்றினாலும் அடுத்தடுத்து வாய்ப்பு தருகின்றனர். இதேபோல, சூர்யகுமாருக்கு ஏன் டெஸ்ட் அணியில் இடம் தரவில்லை. இவர் ஒரு டெஸ்டில் தான் சொதப்பினார். உடனே, ஒருநாள், 'டி-20'க்கு மட்டும் தான் சூர்யகுமார் சரிப்பட்டு வருவார் என தேர்வாளர்கள் முடிவு செய்து விட்டனர்.
சுப்மனை மட்டும் தான் சேர்ப்போம் என விடாப்பிடியாக இருப்பதை விட, ருதுராஜ், சாய் சுதர்சன் போன்றவர்களுக்கு வாய்ப்பு தரலாம். 10 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் அதிக ரன் எடுத்து விட்டு, அணியில் இடத்தை தக்கவைத்துக் கொள்கிறார் சுப்மன்.
இந்திய அணிக்காக யார் வேண்டுமானாலும் ரன் எடுப்பர், விக்கெட் வீழ்த்துவர். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு, தனது தேர்வு சரிதான் என நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணைக் கேப்டனா
முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறுகையில்,'' துணைக் கேப்டன் தேர்வு முக்கியமானது. இதற்கு யார் வரப் போகிறார் எனத் தெரியவில்லை. ஆனால் யார் வரக்கூடாது என எனக்குத் தெரியும். இதற்கு சிலர் ஆசைப்பட்டதாக தெரிகிறது. அப்படி துணைக் கேப்டனாக வர விரும்புபவர்கள், திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆஸ்திரேலியாவில் துணைக் கேப்டனாக சுப்மன் களமிறங்கினார் என பேசப்பட்டன. இவரது நிலைமை இப்போது எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்,'' என்றார்.