பி.சி.சி.ஐ., செயலர் தேவாஜித்
புதுடில்லி: பி.சி.சி.ஐ., செயலராக தேவாஜித் சைகியா, பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்யா ஒருமனதாக தேர்வாக உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலராக இருந்த ஜெய் ஷா 36, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) புதிய தலைவராக தேர்வானார். இணை செயலர் தேவாஜித் லான் சைகியா, தற்காலிக செயலராக செயல்பட்டு வந்தார்.
தவிர, மகாராஷ்டிரா மாநில அமைச்சராக பொறுப்பேற்ற ஆஷிஷ் ஷேலர், பொருளாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால் செயலர், பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் கடந்த வாரம் நடந்தது. இதை வாபஸ் பெற, நேற்று மதியம் 2:00 மணி வரை அவகாசம் தரப்பட்டது. அடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியானது.
தேவாஜித் சைகியா (செயலர்), பிரப்தேஜ் சிங் பாட்யா (பொருளாளர்) என இருவர் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜன. 12ல் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.