திரீஷா-காயத்ரி ஜோடி கலக்கல் * மலேசிய பாட்மின்டனில்...
கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி முன்னேறியது.
மலேசியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின், இந்தியாவின் லக்சயா சென், பிரனாய் உள்ளிட்டோர் களமிறங்கினர். ஆண்கள் ஒற்றையரில் உலகின் 'நம்பர்-26' ஆக உள்ள பிரனாய், 28 வது இடத்திலுள்ள கனடாவின் பிரியன் யங் மோதினர்.
பிரனாய் 21-12, 6-3 என முன்னிலையில் இருந்த போது, மைதான மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு, கீழே விழுந்தன. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, தாய்லாந்தின் சுகிட்டா, ஆர்னிச்சா ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-10, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், 14-21, 7-21 என்ற நேர் செட் கணக்கில் தைவானின் யு சென் ஜியிடம் தோல்வியடைந்தார்.