தந்தைக்கு 'அர்ஜுனா' சமர்ப்பணம் * துளசிமதி பெருமிதம்
புதுடில்லி: ''சிறந்த வீராங்கனைக்கான அர்ஜுனா விருதை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்,'' என துளசிமதி தெரிவித்துள்ளார்.
இந்திய பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் 22. தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். பிறக்கும் போது தசைநார் சிதைவு காரணமாக இடதுகை பாதிக்கப்பட்டது. தினக்கூலி தொழிலாளியான தந்தை முருகேசன், மகள்கள் துளசிமதியை விளையாட்டு அரங்கில் களமிறக்கினார்.
பாட்மின்டனில் கால் பதித்தார் துளசிமதி. 15 நாடுகளில் நடந்த தொடரில் 16 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் வென்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். மத்திய அரசின் 'அர்ஜுனா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து துளசிமதி கூறியது:
பள்ளியில் படித்த போது என்னை கேலி செய்தனர். முதன் முதலில் பாட்மின்டன் விளையாடிய போது கடினமாக இருந்தது. ஆனால்,'இது தான் உனது வேலையாக இருக்கப் போகிறது,' என தந்தை தெரிவித்தார். அவரது முடிவு எனது வாழ்க்கையை மாற்றி விட்டது.
போதிய வசதிகள் இல்லாத நிலையில் சாதாரண 'ஷூ', 'டி சர்ட்' அணிந்து தான் விளையாடினேன். போட்டிகளில் வென்ற பரிசுப் பணத்தைக் கொண்டு தரமான 'ராக்கெட்' வாங்கினேன்.
முதலில் சிறிய அளவிலான போட்டிகளில் வென்று கோப்பையுடன் திரும்பி போது, சக மாணவிகள் பேசத் துவங்கினர். இதன் பின் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என திட்டமிட்டேன்.
ஸ்பெஷல் தருணம்
கடந்த 2022ல் ஒரு கையால் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற போது விபத்தில் சிக்கி பலத்த காயமடைய, முழுமையாக முடங்கினேன். எனது பெற்றோர் கதறினர். இதிலிருந்து மீண்ட பின் பல்வேறு தொடர்களில் அசத்தினேன்.
எனது கனவு நனவாக தந்தை பல்வேறு தியாகம் செய்துள்ளார். நான் வெல்லும் ஒவ்வொரு பதக்கமும், விருதும் அவருக்குத் தான் சொந்தமானது. ஆசிய பாரா விளையாட்டில் வென்ற பதக்கங்களை தந்தைக்கு சமர்ப்பித்தேன்.
சென்னை விமான நிலையத்தில் மண்டியிட்டு, பதக்கங்களை அவரிடம் வழங்கிய தருணம், மறக்க முடியாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
லட்சியம்
துளசிமதி நாமக்கல்லில் கால்நடை மருத்துவம் படித்து வருகிறார். அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட போது, வகுப்பில் இருந்தார். அவர் கூறுகையில்,'' விருது அறிவிப்பு 3:00 மணிக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன். வகுப்பில் இருந்த எனக்கு, இதுகுறித்து தெரியாது. மாலை 5:00 மணிக்குப் பின் அலைபேசியை பார்த்த போது வாழ்த்துகள் குவிந்து இருந்தன. மிகுந்த உற்சாகம் அடைந்தேன். 2025 ம் ஆண்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) பங்கேற்பது தான் முக்கிய லட்சியம்,'' என்றார்.