கண்ணாடி முன்னாடி முகம் பார்த்தால்... * வீரர்களுக்கு கவாஸ்கர் 'அட்வைஸ்'

சிட்னி: ''இந்திய அணியின் சமீபத்திய தோல்விக்கு சொதப்பலான 'பேட்டிங்' முக்கிய காரணம். தங்களது ஆட்டத்தை வீரர்கள் நேர்மையாக மதிப்பீடு செய்ய வேண்டும்,''என கவாஸ்கர் தெரிவித்தார்.
டெஸ்ட் அரங்கில் இந்திய அணி தடுமாறுகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்தது. 'பார்டர்-கவாஸ்கர்' தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற தவறியது. ரோகித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பேட்டிங்கில் ஏமாற்றுகின்றனர்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:
கடந்த ஆறு மாதங்களாக இந்திய அணியின் பேட்டிங் கைகொடுக்காததால், வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் கூட தோற்றோம். உலக டெஸ்ட் பைனலுக்கு தகுதி பெறாததற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரும் ஜூனில் துவங்குகிறது. 2027ல் பைனல் நடக்க உள்ளது. இதற்கு முன் அணியில் இடம் பெறும் வீரர்களை தேர்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும். ரோகித், கோலி போன்றோர் எத்தனை காலம் அணியில் நீடிப்பர் என்பது தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது.
கோலி செயல் சரியா
அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்களை சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களது திறமையை அறிய முடியும். சமீபத்திய ஆஸ்திரேலிய தொடருக்கு நிதிஷ் குமாரை தேர்வு செய்தனர். சதம் விளாசி நம்பிக்கை அளித்தார். இதற்காக தேர்வுக்குழு தலைவர் அகார்கரை பாராட்டலாம். பும்ராவுக்கு அதிக சுமை கொடுக்கக் கூடாது. இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம்.
மெல்போர்ன் டெஸ்டில் கான்ஸ்டாஸ் உடன் கோலி உரசியது தேவையற்றது. இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்ப, சக இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' வெளியே சென்ற பந்துகளை அடித்து வீணாக அவுட்டானார்.
கண்ணாடி சோதனை
தினமும் கண்ணாடி முன் பார்க்கும் போது, நம் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் உடனே தெரியாது. நமது பழைய 'போட்டோ' அல்லது வீடியோ உடன் ஒப்பிட்டு நேர்மையாக ஆய்வு செய்யும் போது, வயதாக வயதாக நம் முகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர முடியும். இதற்கு பின் தோற்றத்தை மெருகேற்ற முயற்சிப்போம். இதே போல ஒவ்வொரு வீரரும் தங்களது முந்தைய, தற்போதைய செயல்பாட்டை நேர்மையாக மதிப்பீடு செய்தால், 'சூப்பர்' வீரர் என நினைக்க மாட்டார். சாதாரண வீரராக உணர்ந்து, ஆட்டத்தில் தேவையான மாற்றத்தை செய்வார்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

ஷமி வராதது ஏன்
கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட இந்திய 'வேகப்புயல்' முகமது ஷமி, உள்ளூர் தொடர்களில் சிறப்பாக பந்துவீசினார். ஆனால் இவரது முழங்காலில் வீக்கம் இருப்பதாக கூறி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வாய்ப்பு மறுத்தனர்.
இது பற்றி இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,''ஷமியின் காயம் தொடர்பாக தெளிவாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நானாக இருந்திருந்தால், அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்திருப்பேன். இங்குள்ள சர்வதேச தரம் வாய்ந்த 'பிசியோதெரபிஸ்ட்' உதவியுடன், காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி அளித்திருக்கலாம். மெல்போர்ன் அல்லது சிட்னி போட்டியில் ஷமி இடம் பெற்றிருந்தால், தொடரின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பார்,''என்றார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறுகையில்,''டெஸ்ட் தொடரின் பாதியில் கூட ஷமி, ஆஸ்திரேலியா வராதது வியப்பாக இருந்தது. முழு உடற்தகுதி இல்லாத பட்சத்தில், ஒருநாளில் சில ஓவர்கள் பந்துவீசியிருக்கலாம். இது இந்திய அணிக்கு பலம் சேர்த்திருக்கும்,''என்றார்

Advertisement