போலி கட்டட அனுமதி தயாரித்த ஒருவர் கைது
பாலக்காடு, ;பாலக்காடு அருகே, போலி கட்டட அனுமதி தயாரித்து பணம் பறித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் வாணியம்குளம் கூனத்தறை பகுதியைச் சேர்ந்தவர் சாபின், தனக்கு போலி கட்டட அனுமதி தந்து ஏமாற்றி பணம் பறித்ததாக கூறி ஒற்றைப்பாலம் போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீஸ் எஸ்.ஐ., சுனில் நடத்திய விசாரணையில், போலி கட்டட அனுமதி சீட்டு அளித்தது, கூனத்தறைபகுதியைச் சேர்ந்த சஜீஷ், 40, என்பது தெரியவந்தது.அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஜீஷ், சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் எஸ்.ஐ., கூறியதாவது:
வாணியம்குளம் ஊராட்சியின் பெயரில், போலி கட்டட அனுமதி சீட்டு தயாரித்து, சாபினை ஏமாற்றி சஜீஷ் பணம் பறித்துள்ளார். வீடு கட்டி முடித்த பின், அதற்கான சான்றிதழை வாங்க ஊராட்சிக்கு சென்ற போது தான், அவர் வைத்திருந்த அனுமதி சீட்டு போலியானது என்பது தெரிந்துள்ளது. இதுபோல் வேறு யாரிடமாவது பண மோசடி நடந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.