நெரிசலை தவிர்க்க 'தனி வழி' அமைக்கணும்! சமூக ஆர்வலர்கள் அளித்த மனு மீது அதிகாரி ஆய்வு

பல்லடம்; பல்லடத்தில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, திருப்பூர் ரோட்டுக்கு தனி வழி அமைக்க வேண்டும் என, பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் நெடுஞ்சாலைத் துறையில் மனு அளித்தனர்.

இதுகுறித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தொழில் நகரான பல்லடத்தில், தேசிய நெடுஞ்சாலையுடன் பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளும் இணைகின்றன. தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் நெடுஞ்சாலைகள் வழியாக வந்து செல்கின்றன. இதனால், பல்லடம் நகரப் பகுதியில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை இணையும் இடத்தில், அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்கள், இடது புறம் திரும்புவதற்கு போதிய இடவசதி இல்லாததால், திருப்பூர் ரோடு சந்திப்பில் அதிக நெரிசல் ஏற்படுகிறது.

இடது புறம் செல்லும் வாகனங்கள், எந்தவித இடையூறுகள் இன்றி திரும்ப வசதியாக, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருப்பூர் ரோட்டுக்கு செல்ல தரைமட்ட பாலத்துடன் கூடிய 'தனி வழி' அமைக்க வேண்டும். இதன் மூலம், திருப்பூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும், சிக்னலுக்காக காத்திருக்காமல், இடதுபுறம் எளிதாக செல்ல முடியும் என்பதால், இப்பகுதியில் ஏற்பட்ட வரும் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும். இப்பகுதியில் தரைமட்ட பாலத்துடன் கூடிய 'தனி வழி' அமைக்க வேண்டும் என, ஏற்கனவே கலெக்டரிடமும், பல்லடத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியிலும் மனு அளித்துள்ளோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்களிடம் ஆயிரம் கையொப்பமும் பெறப்பட்டுள்ளன. எனவே, நெரிசலை குறைக்க 'தனி வழி' ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.

முன்னதாக, கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார். இது குறித்து உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் உறுதியளித்தார்.

Advertisement