திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் வேலஞ்சேரி அரசு பள்ளி
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில், அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 115 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், பழுதடைந்த பள்ளி கட்டடத்தில் அமர்ந்து படித்து வந்தனர்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், வேலஞ்சேரி அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதலாக, 12 வகுப்பறைகள் கட்டுவதற்கு நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ், 2.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித் துறையினரிடம் புதிய கட்டடத்தை கட்டுவதற்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, திருத்தணி பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு துறை நிர்வாகம் சார்பில், கடந்தாண்டு, பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, இரண்டு அடுக்கு புதிய கட்டடத்தில் மொத்தம், 12 வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் , மாணவர் - மாணவியர் என, தனித்தனியாக போதிய கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது புதிய பள்ளி கட்டடத்தின் பணிகள் முழுமையாக முடிந்து, பள்ளியை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், திறப்பு விழா காணாமல் புதிய பள்ளிக் கட்டடம் பூட்டியே கிடக்கிறது.
தற்போது, போதிய வகுப்பறைகள் இல்லாததால், எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், அதே வளாகத்தில் பழுதடைந்த பள்ளி கட்டடத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், மாணவர்கள் நலன்கருதி, புதிய பள்ளி கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.