மாஜி முதல்வர் மகன் விரைவில் கைது?
ஹைதராபாத் : பார்முலா கார் பந்தய முறைகேடு தொடர்பாக, பாரத் ராஷ்ட்ர சமிதி செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் மீதான வழக்கை ரத்து செய்ய, தெலுங்கானா உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு முந்தைய பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியின் போது, அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
ஹைதராபாதில் பார்முலா கார் பந்தயம் நடத்த, கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் திட்டமிட்டார்.
ஆனால், அதற்கு முன்னதாகவே, 2023 டிசம்பரில் அரசு காலாவதியாகி, சட்டசபை தேர்தலில் ஆட்சியை காங்., கைப்பற்றியது. இதையடுத்து, திட்டம் கைவிடப்பட்டது.
இத்திட்டத்திற்கு, அனுமதியின்றி வெளிநாட்டு முதலீடு பயன்படுத்தப்பட்டதாகவும், அதனால், அரசுக்கு 55 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, டிச., 19ல் ராமராவ் மீது, ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர் நீதிமன்றம், ராமராவை கைது செய்ய தடை விதித்து, தேதி குறிப்பிடாமல், டிச., 31ல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, ராமராவை கைது செய்ய முன்பு விதித்திருந்த தடை உத்தரவை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.
இதனால், கே.டி.ராமராவ் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் அவர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.