சாலை விபத்தில் காயமடையும் நபருக்கு ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை
புதுடில்லி: சாலை விபத்தில் காயமடையும் நபருக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, வரும் மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டில்லியில் கடந்த 6 மற்றும் 7ல், பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்த பயிலரங்கம் நடந்தது. இதில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி பங்கேற்றார்.
அப்போது, அமைச்சர் கட்கரி கூறுகையில், ''சாலை விபத்தில் சிக்கி காயமடையும் நபருக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, வரும் மார்ச்சுக்குள் அரசு அமல்படுத்த உள்ளது,'' என்றார்.
குறிக்கோள்
இந்த புதிய திட்டத்தின்படி, விபத்து நடந்த பின், ஏழு நாட்கள் வரை காயமடையும் நபர், 1.5 லட்சம் ரூபாய் வரை மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற முடியும். அனைத்து வகையான வாகன விபத்துகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
காவல் துறை, மருத்துவமனைகள், மாநில சுகாதார முகமைகளுடன் இணைந்து, இத்திட்டம் செயல்படுவதை தேசிய சுகாதார கமிஷன் மேற்பார்வையிடும். விபத்தைத் தொடர்ந்து, 'கோல்டன் ஹவர்' எனப்படும் முக்கியமான நேரத்தில் மருத்துவ சேவையை உறுதி செய்வதே இந்த புதிய திட்டத்தின் குறிக்கோள்.
எதிர்பார்ப்பு
இத்திட்டம், சோதனை முயற்சியாக, சண்டிகரில் 2024 மார்ச் 14ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின், ஆறு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
பிப்ரவரியில் தாக்கல் செய்யவுள்ள மத்திய பட்ஜெட்டில், இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.