மோட்டார் பொருத்தி குடிநீர் திருட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் அடாவடி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகளில், 75,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நகருக்கு பழவேலி, மாமண்டூர் பாலாற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

மேலும் குடியிருப்புகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் நத்தம், ஜே.சி.கே., நகர், வேதாசலம் நகர், பாரதியார் தெரு, அழகேசன் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக உள்ளன.

இங்குள்ள குழாய்களில், சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் பொருத்தி, அதிக அளவு குடிநீரை உறிஞ்சுவதால், மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி பலர், தரைமட்ட அளவில் தொட்டிகளைக் கட்டி, அதில் குடிநீரை நிரப்பி, அதிலிருந்து மாடி வீடுகளில் உள்ள தொட்டிகளில் நிரப்பிக் கொள்கின்றனர். இதனால், பலருக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், நகரில் உள்ள அனைவருக்கும் சீரான குடிநீர் வழங்க கோரி, பாரதியார் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

எனவே, நகரவாசிகள் நலன் கருதி, சட்டத்திற்கு புறம்பாக மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீர் திருடப்படுவதை தடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement