இவ்வளவு பொய் பேச வேண்டுமா: கவர்னர் வெளியேறியதற்கு காரணம் சொன்னார் சீமான்!

39


கடலூர் : 'இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று எண்ணித்தான் கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறி விட்டார்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.


கடலூர் மாவட்டம் வடலூரில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: உங்களுக்கான உரையை நீங்களே எழுதிக்கோங்க என்று சொன்னால் எப்படி எழுதுவீங்க? சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு இடங்களிலும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் மது கடைகள் திறந்து இருக்கிறது என்று எழுதி படித்துவிடுவீர்களா?


அவ்வளவு தூய உள்ளத்தோடு ஆட்சி செய்பவர்களா நீங்கள்? நீங்கள் எழுதி கொடுத்ததை கவர்னர் படிக்க வேண்டும். என்ன இவ்வளவு பொய் பேச வேண்டுமா? என்று நினைத்து கவர்னர் சென்றுவிட்டார். இதே கவர்னர் படித்து இருந்தால் நாங்கள் என்ன நினைப்போம்? அவர் தி.மு.க.,விலேயே சேர்த்துவிடலாம் என்று தான் நினைப்போம்.



எல்லாருக்கும் தெரியும், அனைத்து இடங்களில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. நான் தலைவர்களை நம்பி வரவில்லை. நான் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும். டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியிலும், பஞ்சாபிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற முடியாதா? முடியாது என்று சொல்கிறார்கள். நான் தனித்து நின்று நிகழ்த்தி காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement