உன்னி காய்ச்சலால் ஓராண்டில் பாதித்தவர்கள் 594 பேர்! தடுப்பு நடவடிகைகள் தீவிரம்

கடலுார்: 'ஸ்க்ரப் டைபஸ்' என்ற, உன்னி காய்ச்சல் நோயால், கடலுார் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில்594 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


'ஸ்க்ரப் டைபஸ்' என்ற ஒரு பாக்டீரியா நோய் தொற்று, ஓரியண்ட்ஷியா சுட்சுகாமுஷி என்ற ஒட்டுண்ணி மூலமாக பரவுகிறது. இந்த உன்னிப் பூச்சியானது புதர் மண்டிய பகுதி மற்றும் அதிகமான செடி, கொடிகள் நிறைந்த பகுதிகளில் காணப்படும்.

விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணி பெண்கள், பூச்சி கடிக்கு உள்ளாகும் சூழலில் இருப்போருக்கு, இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அக்டோபர் முதல் ஜனவரி வரையில், நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில், அதிக அளவில், 'ஸ்க்ரப் டைபஸ்' பரவல் உள்ளது. அதேபோல், கிழக்கு தொடர்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், இத்தகைய பாதிப்பு காணப்படுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி மற்றும் உடலில் எங்காவது கருப்பு புண் போன்ற தோற்றம் காணப்படும்.

கடலுார் மாவட்டத்திலும் இந்நோய் பாதிப்பு உள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு 594 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் குணமாகி உள்ளனர். இதில் 2024ம் ஆண்டு ஜன.,116 பேர், பிப்.,58, மார்ச் 32, ஏப்.,9, மே 4, ஜுன் 7, ஜூலை 18, ஆக.,36, செப்.,49, அக்.,66, நவ.,95, டிச.,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் (ஜன.,) இதுவரை 12 பேர் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். தொடர்ந்த நோய் தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கடலுார் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்நோய் நபர்கள் முன்று நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் எலிசா ஐ.ஜி.எம்., ஆன்டிபாடி ரத்த பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி கடலுார் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ளது. இதற்குண்டான சிகிச்சை, மாத்திரைகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் போதுமான மருந்துகள் இருப்பு உள்ளது.

நோய் பாதித்தவர்கள் வசிக்கும் இடங்களில் 'ப்ளீச்சிங்' பவுடர் மூலம் கிருமி நாசனம் மற்றும் எலி பொந்துகள், புதர் மண்டிய பகுதிகளை அகற்ற வேண்டும். மிக முக்கியமாக 'கோல்ட்பாக்' எனப்படும் குளிர்நிலை புகை தெளித்தல், பொது மக்களுக்கான விழிப்புணர்வு மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தி, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement