மஹா கும்பமேளா மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்: யோகி ஆதித்யநாத் கணிப்பு
லக்னோ: உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவுக்கு ரூ.5,000 கோடி செலவிடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு முதல்வர் யோகி ஆதியநாத், இந்த மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவின் மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று பதில் கொடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், இந்தாண்டு மஹா கும்பமேளா வரும் ஜன., 13ம் தேதி முதல் பிப்.,26ம் தேதியுடன் (மஹாசிவராத்திரி) முடிவடைகிறது. மிகப்பெரிய ஆன்மிக கலாசார விழாவான இந்த மஹா கும்பமேளா, தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில், உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மஹா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது. சுமார், ரூ.5,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலளித்ததாவது: இது மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழா. இந்த கும்ப மேளாவின் மூலம் மாநிலம் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி பெறும். அதேவேளையில், அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டு ஓராண்டாகி விட்டது.
உத்தரபிரதேசம் மாநிலம் ஆன்மிக சுற்றுலா மையமாக திகழ்வது குறித்து உயர் அதிகாரிகளுடன் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கும்ப மேளாவுக்கு ரூ. 5,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வருமையால் அரசுக்கு, செலவிடப்பட்டதை விட கூடுதல் வருவாய் கிடைக்கும்.
2017ம் ஆண்டுக்கு முன்பாக வாரணாசிக்கு 50 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தனர். ஆனால், 2024ல் 16 கோடி பேராக அதிகரித்துள்ளது. அதேபோல, 2016ல் பிற மாநிலங்களைச் சேர்ந்த 2.83 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 1,200 வெளிநாட்டு பயணிகளும் அயோத்திக்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால், 2024ம் ஆண்டின் ஜன., முதல் செப்., மாதம் வரையில் சுமார் 13.55 கோடி பேர் அயோத்திக்கு வந்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், ஓட்டல்கள் உணவகங்கள் என அனைத்திற்கும் ஒரு நபருக்கு ரூ.5,000 என்று கணக்கிட்டால் கூட, வாரணாசியில் மட்டும் ரூ.80,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா உள்ளிட்ட நகரங்களின் வளர்ச்சியை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. மாறாக, சாதி, மதம், மொழியின் அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தி பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள், எனக் குற்றம்சாட்டினார்.