நெய்வேலியில் விமான நிலையம்; டாக்டர் விஷ்ணு பிரசாத் தீவிரம்
கடலூர் ; தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும் கடலூர் லோக்சபா தொகுதி எம்.பி., யுமான டாக்டர் விஷ்ணு பிரசாத் கூறியதாவது:
கடலூர் லோக்சபா தொகுதியில் மக்கள் நல திட்ட பணிகள் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நிதி உதவியுடன் நடந்து கொண்டு இருக்கிறது.நெய்வேலியில் விமான நிலையம்
அமைக்க தீவிரப் பணியில் ஈடுபட்டேன். மத்திய விமானத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தேன். நெய்வேலி முதல் சென்னை நெய்வேலி முதல் பெங்களூர் நெய்வேலி முதல் டெல்லிக்கு விமான பறக்க விட வேண்டும் என வலியுறுத்தினேன். தற்போது விமான நிலையம் அமைக்க ஓடுதளம் அமைக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. இடம் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
எனது கனவு திட்டம்
விமான நிலையம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு 22 போலீஸ் வழங்குவதற்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் முடிந்து விமானம் பறக்கும் விழா நடைபெறும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் தாம்பரத்திலிருந்து திருச்சிக்கும் தாம்பரத்திலிருந்து ராமநாதபுரத்திற்கும் செல்லும் ரயில் பண்ருட்டியில் நின்று போக வேண்டும் என ரயிலில் செல்லும் பயணிகள் சங்க நிர்வாகிகள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது இரண்டு ரயில்களும் பண்ருட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்கின்றன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மிகுந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பது எனது கனவு திட்டமாக உள்ளது.
புற்றுநோய் அதிகரிப்பு
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற வேண்டும் தற்போது சிப்காட் உள்ளது. சுகாதாரத் துறையிலும் எனது தொகுதி இந்தியாவிலேயே முன்மாதிரி தொகுதியாக திகழ வேண்டும் என்பதும் எனது விருப்பம். அதன் அடிப்படையில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் கொண்டு வருவதற்கும் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன் கடலூர் வாழ் மக்களிடம் புற்றுநோய் அதிகரித்து வருகிறது இதுவரை என்னிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் புற்றுநோய் மருத்துவத்திற்கு சிகிச்சை செலவு செய்வதற்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு பரிந்துரை கடிதம் கேட்டு வந்துள்ளனர்.
நான் வழங்கிய பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் மூன்று லட்சம் ரூபாய் தலா ஒரு நோயாளிக்கு வழங்கப்படுகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இருதய அறுவை சிகிச்சைக்கும் ரூபாய் 50,000 ரூபாய் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கும் பரிந்துரை கடிதம் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. நானும் ஒரு டாக்டர் என்று அடிப்படையில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சுகாதாரத் துறை வாயிலாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் மத்திய மாநில அரசிடம் கோரிக்க வைத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.