ஆரம்ப சுகாதார நிலையங்களை... அதிகரிக்க திட்டம்! தாம்பரத்தில் கணக்கெடுப்பு மும்முரம்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் உள்ள குடும்பங்கள் குறித்து துல்லியமாக கணக்கெடுத்து, அவர்களின் மருத்துவ தேவைக்காக, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டமாக, 120 கேள்விகள் அடங்கிய தகவல்களை பெறும் பணியில், மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள்உள்ளன. மொத்தம் 2.85 லட்சம் குடியிருப்புகளில் 10.30 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இவர்களின் மருத்துவ வசதிக்காக, 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒன்பது நகர்நல மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இரவு, பகல் என, எந்த நேரத்திலும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, இவை செயல்படுகின்றன.
பற்றாக்குறை
ஆனால், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள மேற்கண்ட மருத்துவ சேவை மையங்களில் மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறை, இரவில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கின்றன.
தேசிய நகர்ப்புற நலக்குழுமம் வரையறைப்படி, 50,000 பேருக்கு, ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இருக்க வேண்டும்.
ஆனால் இம்மாநகராட்சியில், குறைந்தபட்சம் 27,187 முதல் அதிகபட்சம் 1,45,427 மக்கள் தொகைக்கு, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற வகையில் செயல்படுகிறது.
மேலும், ஆரம்ப சுகாதார நிலைய சேவை பகுதி தொடர்ச்சியாக இல்லாமல், இரண்டு பகுதிகளாக பிரிந்து காணப்படுகிறது.
அதாவது, ஒரு பகுதி மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவது கடினமாக உள்ளது.
இந்த முரண்பாடுகளை சரிசெய்யும் வகையில், தாம்பரம் மாநகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை, யு.என்.ஐ.சி.இ.எப்., நிறுவனத்துடன் இணைந்து, குடும்ப கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
அந்த வகையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் வீடுதோறும் சென்று, எந்த வகை வீடு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, மருத்துவ காப்பீட்டு, சுகாதார மதிப்பீடு, குழந்தைகளின் தடுப்பூசி, மகப்பேறு மற்றும் குடும்ப நலம், சமூக பொருளாதார மதிப்பீடு, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
இதன் வாயிலாக, சுகாதார சேவை எப்படி, மக்களை சென்றடைவதில் ஏற்படும் சிக்கல் மற்றும் பொதுமக்களின் நலனை பாதிக்கக்கூடிய பல்வேறு காரணிகள் குறித்து ஆராயப்படும்.
பின், எந்தெந்த பகுதிகளுக்கு மருத்துவ சேவை நிலையங்கள் தேவை என்பதை வரையறை செய்து, பொதுமக்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
120 கேள்விகள்
அனைத்து மருத்துவ சேவை மையங்களும், பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி நகர்நல அலுவலர் பொற்செல்வன் கூறியதாவது:
குடும்ப கணக்கெடுப்பு என்பது, அந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. இருப்பினும், நகரமயமானபின், ஒவ்வொரு இடத்திலும், எத்தனை பேர் வசிக்கின்றனர்; எத்தனை பேர் வந்து செல்கின்றனர் போன்ற விபரம் துல்லியமாக தெரிவதில்லை.
இதை கருத்தில் கொண்டு, துல்லியமான குடும்ப கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 'ஓ.டி.கே., கலெக்ட் ஆப்' எனும் மின்னணு இயந்திரம் வாயிலாக, இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ஒரு பகுதியில், ஒவ்வொரு குடும்பமாக சென்று, ஆறு மாதங்களுக்கு மேல் இருப்போர் குறித்து, ஒரு செயலி வாயிலாக விபரம் கேட்கப்படும். அவர்களிடம் கிடைக்கும் தகவலை வைத்து 120 கேள்விகள் பூர்த்தி செய்யப்படும்.
ஒத்துழைப்பு
ஆறு மாதங்கள் கழித்து, அந்த பகுதியில் மீண்டும் ஆய்வு நடத்தினால், அங்கு எத்தனை பேர் இருக்கின்றனர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் துல்லியமாக அறியலாம்.
தற்போது, மாநகராட்சியின் 48வது வார்டில், சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
இது வெற்றிகரமாக முடிந்ததும், அடுத்த மாதம் அனைத்து வார்டுகளிலும் துவங்கும். ஒவ்வொரு மண்டலத்திலும், 80 பேர் இதில் ஈடுபடுவர். மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
தமிழத்திலேயே முதல் முறையாக, தாம்பரம் மாநகராட்சியில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த கணக்கெடுப்புக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.