ஞானசேகரனை தி.மு.க., நிர்வாகி என ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியமில்லை: அண்ணாமலை

19

சென்னை: ' ஞானசேகரனை ஒரு தி.மு.க., நிர்வாகி தான் என்பதை அக்கட்சியினர் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்ற தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அவரை தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அமைச்சர்கள் அதனை மறுத்தனர்.

இந்நிலையில், சட்டசபையில் இச்சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்த விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ஞானசேகரன் தி.மு.க., உறுப்பினர் அல்ல. தி.மு.க., ஆதரவாளர் எனக்கூறினார்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும் தி.மு.க.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று. ஞானசேகரன் தி.மு.க., அனுதாபி தான், ஆனால் தி.மு.க., நிர்வாகி இல்லை என்கிறார்கள் இன்று. விரைவில் "யார் அந்த சார்?" என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் ஒரு தி.மு.க., நிர்வாகி தான் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும், ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் இல்லை என்று அமைச்சர் ரகுபதி, கோவி செழியன் அளித்த பேட்டிகள் மற்றும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம் இடம்பெற்ற காட்சிகள் அடங்கிய வீடியோவையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

Advertisement