சவுதி அரேபியாவில் மீண்டும் மிரட்டும் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

3

ரியாத்: கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பாலைவன நிலப்பரப்பை கொண்டசவூதி அரேபியாவில் மழைப்பொழிவு என்பது மிகவும் அரிதானது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த நாட்டில் மழை தொடர்ந்து பெய்கிறது.அந்த நாட்டின் முக்கிய நகரங்களான மெக்கா, மதினா, ஜெட்டா உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.


சவூதி அரேபியாவை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு சராசரி மழை அளவு 10 சென்டிமீட்டர் மழை தான் சராசரியாக பெய்யும். ஆனால் இரண்டு நாட்களில் சவுதியில் 4.9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல் ஜெட்டா நகரில் 3.8 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த மழையின் காரணமாக அங்குள்ள பல சாலைகள் மற்றும் சதுக்கங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.


மழை வெள்ளத்தால் சாலைகள் மற்றும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இந்நிலையில் சவுதி தேசிய வானிலை ஆய்வு மையம் இன்று மிதமானது முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

அதன்படி,
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் தூசி நிறைந்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அவற்றில் கிழக்கு நகரங்களான அல் அஹ்ஸா, ஜுபைல், அல் கோபார், தம்மாம் மற்றும் கதீப் ஆகியவை அடங்கும். இவ்வாறான காலநிலையானது புதன்கிழமை நண்பகல் 12 மணி வரை தொடரும் . முக்கிய இடங்களான மெக்கா பகுதியும் மதீனாவும் இன்று கனமழையால் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

Advertisement