'கொடை'குதிரை தாலி கிழங்கில் போதையா: ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு
திண்டுக்கல்: கொடைக்கானல் கவுஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் குதிரை தாலி கிழங்கில் போதை உள்ளதா என ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொடைக்கானல் கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குதிரை தாலி எனும் கிழங்கு விளைகிறது. இந்த கிழங்குகளை பிடுங்கி அதை கல்லாய் நைய்த்து நசுங்கிய நிலையில் அதை மூக்கில் வைத்து நுகர்ந்து பார்த்தால் அதிலிருந்து வெளியாகும் வாசனை மூளைக்கு சென்று சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது. இதை பூண்டியை சேர்ந்த ராஜா என்பவர் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு செய்து அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுகொள்கிறார்.
இதை கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து குதிரை தாலி கிழங்கை நுகர்ந்து பார்த்ததும் போதை தலைக்கேறியது போல் சைகை காட்டி வீடியோவாக எடிட் செய்து சமூக வலை தளங்களில் பதிவு செய்தனர். இதைப்பார்த்த இளைஞர்கள் ஏராளமானோர் கவுஞ்சி, பூண்டி பகுதிகளுக்கு ராஜாவை ,தேடி படையெடுக்க தொடங்கினர்.
இந்த விவகாரம் திண்டுக்கல் மது விலக்கு போலீசாருக்கு தெரிய அவர்கள் நேற்று பூண்டி ராஜாவை, அழைத்து குதிரை தாலி கிழங்கை நுகர்வதால் என்ன நடக்கும் என்பது குறித்தும் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்தனர்.
குதிரை தாலி கிழங்கில் போதை தன்மை உள்ளதாக சந்தேகமடைந்த போலீசார் கவுஞ்சி பகுதியில் விளைந்த கிழங்கில் சிறிதளவு சேகரித்து சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் போதை தன்மை உள்ளதா என ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த அறிக்கை வந்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.