திண்டிவனம் உழவர் சந்தைக்கு இன்று வௌ்ளி விழா: கூடுதல் வசதிகள் செய்து தர பொது மக்கள் கோரிக்கை

திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள உழவர்சந்தை இன்று (9ம் தேதி) வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கூடுதல் வசதிகளை ஏற்படுத்திதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம்-செஞ்சி ரோடு, சஞ்சீவிராயான்பேட்டை பகுதியிலுள்ள உழவர் சந்தை 25 ஆவது ஆண்டு நிறைவு பெற்று வெள்ளி விழா கொண்டாட போகிறது. இந்த உழவர்சந்தை அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதியில் 9-1.2000 அன்று துவங்கி வைக்கப்பட்டது.

அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் 100 உழவு சந்தைகள் திறக்கப்பட்டன. அதில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் உழவர் சந்தை 13வது ஆக திறக்கப்பட்டது.

விவசாயிகள் விளை வித்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபமும், நுகர்வோர்களும் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பசுமையான காய்கறிகளை குறைவான விலைக்கு வாங்குவதும் உழவர் சந்தை திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

திண்டிவனத்திலுள்ள உழவர் சந்தையில் தினந்தோறும் புத்தம், புதியதாக 55 முதல் 65 விதமான காய்கறிகளை கடந்த 25 ஆண்டுகளாக பொதுமக்கள் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி பயன் அடைந்து வருகின்றனர்.

சந்தையில் அமைக்கப்பட்டுள்ள 64 கடைகளில் நாள்தோறும் 70 முதல் 80 விவசாயிகள் மூலம் 16 முதல் 18 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள், கீரைகள், இளநீர் ,பூக்கள் என வெளிமார்க்கெட்டை விட குறைந்த விலையில் விற்கப்படுகின்றது. வெள்ளிவிழா காண உள்ள திண்டிவனம் உழவர் சந்தையில் ஆரம்பத்தில் 24 கடைகள்தான் இருந்தது. தற்போது 64 கடைகள் வரை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உழவர் சந்தையில் தினசரி சேரும் காய்கறி கழிவுகளை உரமாக்கி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனைசெய்வதற்கு தேவையான இயந்திரமும் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இன்று (9ம் தேதி) வெள்ளி விழா கொண்டாட உள்ள திண்டிவனம் உழவர்சந்தையைமாநிலத்திலேயே முன்மாதிரி உழவர்சந்தையாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement