தி.மு.க., அரசை திருத்த எத்தனை சாட்டையடிக்கும் தயார்: அண்ணாமலை பேச்சு

26

திருப்பூர்: '' தொடர்ந்து நமக்கு நாமே சாட்டையடி கொடுத்து தான் மாநில அரசை திருத்த வேண்டும் என்றால், எத்தனை சாட்டையடிக்கும் தயாராக இருக்கிறேன்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டம்



திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி, 78. இவரது மனைவி அலமேலு, 75. இவர்களின் மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த ஆண்டு நவ.,29ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்ய 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டும், யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றறவாளிகளை கைது செய்யாத தி.மு.க., அரசை கண்டித்து திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


சி.பி.ஐ., விசாரணை


இதில் அண்ணாமலை பேசியதாவது: கொலை சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., சார்பில் கடிதம் எழுதினேன். அதில், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என அதில் கூறியிருந்தேன்.
செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்த நாளில், மத்திய அரசு விசாரணை அமைப்புகள், தமிழகத்தில் விசாரணை நடத்துவதற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்துவிட்டனர். இதனால், மாநில அரசு அனுமதி இல்லாமல் விசாரணை நடத்த முடியாது. ஒரு குற்றவாளியை நீங்கள் பிடிக்கவில்லை என்றால், அவருக்கு பயம் போய்விடும். மறுமுறை அதே குற்றத்தை தைரியமாக செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

பற்றாக்குறை


காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தமிழகத்தில் காவல்துறை செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். 2023 - 24ல் சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் தேர்வு நடத்தப்படவில்லை. ஒவ்வொரு காவல் நிலையத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. ரோந்து வர முடியவில்லை. போலீசாரை பார்க்க முடியவில்லை.
புகார் கொடுப்பதற்கு 4-5 மணி நேரம் ஆகிறது. பாதி நேரத்தில், ஆர்ப்பாட்டம், பாதுகாப்பு பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால், குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க முடியவில்லை.குற்றம் நடந்த பிறகு சுத்தமாக கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றம் அதிகரித்து வந்தால், பெண்கள், குழந்தைகள் எப்படி இரவு எட்டு மணிக்கு மேல் தெருவில் நடக்க முடியும்.

கவர்னரிடம் மனு


காவல்துறைக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் ஒரு கொலை நடந்தால் கூட சி.பி.ஐ.,க்கு கொடுத்து விடுவார்கள். இங்கு மூன்று பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து நடக்கிறது. அரிவாள் கலாசாரம் அதிகரித்து உள்ளது. அப்படி இருந்தும் ஏன் சி.பி.ஐ.,க்கு கொடுக்கவில்லை.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க., சார்ந்த நபர்கள் 125 பெரும் குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர். இதை பட்டியல் போட்டு கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.

மக்களுக்கான முதல்வரா


எங்களின் கோபம் காவல்துறை மீது கிடையாது. காவல்துறை கையை கட்டி போட்டு வேலை செய்யுங்கள் என்றால் செய்ய முடியாது. இந்த வழக்கை மட்டுமாவது சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். இதையும் கேட்கவில்லை என்றால், முதல்வர், மக்களுக்கான முதல்வரா என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

தயார்


அண்ணா பல்கலை விவகாரத்தில் அமைப்பு தோல்வி அடைந்துள்ளது. காவல்துறை நடுநிலையோடு இருக்கிறவர்கள் தோல்வி அடைய ஆரம்பித்து உள்ளனர். பெண் குழந்தைகள் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் எனது சாட்டையடியே தவிர சாதாரண மனிதன் சாட்டை எடுத்து அடிப்பது இல்லை.
காவல்துறையில் இருந்து எப்.ஐ.ஆர்., வெளியில் போகக்கூடாது, குற்றவாளி பட்டியலில் உள்ளவரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக சாட்டையடி. தொடர்ந்து நமக்கு நாமே சாட்டையடி கொடுத்து தான் அரசை திருத்த வேண்டும் என்றால், எத்தனை சாட்டையடிக்கும் நான் தயாராக இருக்கிறேன்.

செருப்பு போடாமல் தான் இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் செருப்பை அணியப் போவது கிடையாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement