இதயத்தைக் கவர்ந்தது இந்தியா: அமெரிக்க துாதர் பெருமிதம்

5

புதுடில்லி: ''இந்தியா என் இதயத்தைக் கவர்ந்துள்ளது,'' என்று அமெரிக்க துாதர் எரிக் கார்செட்டி கூறினார்.


இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது:
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பின் பதவியேற்பு விழாவிற்கான விருந்தினர் பட்டியல் குறித்து எனக்குத் தெரியாது.
இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் டொனால்டு டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு, முதலில் வாஷிங்டனிலும், அதன் பின்னர் இந்தியா குவாட் உச்சி மாநாட்டை நடத்தும்போதும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கார்செட்டி கூறினார்.


'டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைக்கப்படுவாரா' என்ற கேள்விக்கு பதிலளித்த கார்செட்டி, 'அதைப் பற்றி என்னால் பேச முடியாது. அழைப்புகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ''பிரதமர் மோடியும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பும் நெருக்கமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் நேரடியாக சந்திக்கும் நிகழ்வுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

''இது என் வாழ்க்கையின் மிக அசாதாரணமான வேலை. சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான உறவில் இருப்பது பற்றியது தான் எனது வேலை.

''அடுத்த வாரம், பெங்களூருவில் ஒரு புதிய துணைத் தூதரகத்தைத் திறக்கவுள்ளோம். தனிப்பட்ட முறையில், இந்தியா என் இதயத்தைக் கவர்ந்துள்ளது,'' என்றார்.

Advertisement