பொங்கல் பண்டிகைக்கு 600 சிறப்பு பஸ் இயக்கம்
பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில், மதுரை, தேனி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
பண்டிகை காலங்களில், சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள், கோவையிலிருந்து வரும் அரசு பஸ்களையே பெரும்பாலும் நம்பி உள்ளனர். கோவையில் இருந்து வரும் பஸ்கள், பயணிகளுடன் நிரம்பி வருவதால், பல்லடம் தொழிலாளர்கள் குடும்பத்துடன் நின்று கொண்டு தான் பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இச்சூழலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்து கழகம், தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயங்க உள்ளன. கோவையில் இருந்து, மதுரைக்கு, 250, திருச்சிக்கு, 200 மற்றும் தேனி செல்ல, 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கோவை சிங்காநல்லுாரில் இருந்து புறப்படும் இந்த பஸ்கள் அனைத்தும், சூலுார், பல்லடம் வழியே செல்லும் என்பதால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஏராளமான தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்பெற வாய்ப்பு உள்ளது.
இன்று அதிகாலை முதல், 14ம் தேதி அதிகாலை வரை சிறப்பு பஸ்கள் இயங்கும் என, கோவை மண்டல மேலாண் இயக்குனர் செல்வம் தெரிவித்துள்ளார்.