தொகுதி பிரச்னைகளை எழுப்பி தி.மு.க., - எம்.எஸ்.ஏ.,க்கள் சரமாரி கேள்வி! சட்டசபையில் துறை அமைச்சர்கள் மாறி மாறி சமாதானம்

1

சென்னை :சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்த எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதிகளின் பிரச்னைகள் குறித்து, சட்டசபையில் நேற்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

''ராயபுரத்தில், குடிநீரில் கழிவுநீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு காண, குழாய்கள் புதிதாக மாற்றியமைக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவும், ''வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை விரைவில் சீரமைக்கப்படும்,'' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலுவும் உறுதி அளித்தனர்.

மூன்று லட்சம் பேர்



சட்டசபையில் நடந்த விவாதம்:

மூர்த்தி, தி.மு.க., ராயபுரம்: என் தொகுதியில், 335 தெருக்களில், 100, 150 மீட்டர் விட்டம் உடைய கழிவுநீர் குழாய்களும், குடிநீர் குழாய்களும் 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன. அவை சேதம் அடைந்து, குடிநீர், கழிவுநீர் கசிவு ஏற்பட்டு, தினமும் பராமரிக்கும் சூழல் உள்ளது. இவற்றை மாற்றித்தர வேண்டும்.

கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் இருந்து, ராயபுரம் நீரேற்று நிலையத்திற்கு, 25 எம்.எல்.டி., நீரை அனுப்ப வேண்டும். ஆனால், 17 எம்.எல்.டி., மட்டுமே வழங்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு: எஸ்.என்.செட்டி தெருவில், 23.3 கோடி ரூபாய் மதிப்பில், கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 1,670 மீட்டர் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் ஜூலை, 19க்குள் முடிக்கப்படும். இந்த பணிகள் முடிந்தால், எஸ்.என்.செட்டி தெரு மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில், கழிவுநீர் வெளியேறுவது தவிர்க்கப்படும்.

ராயபுரம் தொகுதியில், 3 லட்சத்து 144 பேர் வசிக்கின்றனர். இங்கு, 546 தெருக்கள் உள்ளன. இங்கிருந்து நாள்தோறும், 23.3 மில்லியன் லிட்டர் கழிவுநீர், கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. வடசென்னையில், 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய்களை மாற்ற வேண்டும் என, முதல்வர் கூறியுள்ளார்.

இதற்காக, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 944 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள், வரும், 2026க்குள் முடிக்கப்படும்.

சென்னைக்கு, முன், 900 எம்.எல்.டி., குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இப்போது, 1,040 எம்.எல்.டி., குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால், அடுத்தாண்டு ஜூனில், பருவமழை துவங்கும் வரை குடிநீருக்கு பிரச்னை இல்லை.

சிக்கல் இல்லை



கூடுதலாக தண்ணீர் தருவதில் சென்னை குடிநீர் வாரியத்திற்கு எந்த சிக்கலும் இல்லை. அதிகாரிகளுடன் கலந்து பேசி, ராயபுரத்திற்கு கூடுதல் குடிநீர் வழங்கப்படும்.

எஸ்.ஆர்.ராஜா, தி.மு.க., தாம்பரம்: வளர்ந்துவரும் பகுதியான தாம்பரத்தைச் சுற்றியுள்ள சாலைகள் வேகமாக போடப்பட்டுள்ளன. புதிதாக ஈஸ்டன் பைபாஸ் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், வண்டலுார் - கேளம்பாக்கத்தை இணைக்கும் சாலை போடப்படாதது, குறையாக உள்ளது. நெடுஞ்சாலைத் துறையிடம் இந்த சாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு: முக்கியத்துவம் கருதி, நடப்பாண்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து இப்பணிகள் துவங்கப்படும்.

வரலட்சுமி, தி.மு.க., செங்கல்பட்டு: காட்டாங்கொளத்துாரை அடுத்த கொண்டமங்கலம் ஊராட்சியில், முக்கிய சாலை, 3 கி.மீ., பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் உள்ளது. கிராம சாலையாக இருந்த இந்த சாலை, ஊரக சாலையாக வகை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முக்கியத்துவம் கருதி, பக்கவாட்டு கால்வாயுடன் சாலையை அமைத்து தரவேண்டும்.

அமைச்சர் வேலு: கிராம சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறை வாயிலாக அமைக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 4,000 கி.மீ., சாலைகளை எடுத்தோம். அதில் 25 சதவீத பணிகள் மீதமுள்ளன. அந்த பட்டியலில் இந்த சாலை இருந்தால், நடப்பாண்டே பணிகள் முடிக்கப்படும். ஊரக உள்ளாட்சி துறை வாயிலாகவும், 4,000 கி.மீ., சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.

எழிலரசன், தி.மு.க., காஞ்சிபுரம்: மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரத்தில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். காஞ்சிபுரத்தில் வணிக வளாகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக உள்ளது. வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள, 1.33 ஏக்கர் நிலத்தில் வீட்டு வசதி வாரியம் வாயிலாக வணிக வளாகம் கட்ட வேண்டும். இது வணிகர்களுக்கு பெருமக்களுக்கு பயனனுள்ளதாக இருக்கும்.

வீட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி: அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டினால், போதிய அளவிற்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா என ஆய்வு செய்யப்படும். நடப்பாண்டு அதற்கான திட்டம் உருவாக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement