கேரளாவிலிருந்து மீண்டும் தமிழகம் வந்த கழிவுகள்; 5 வாகனங்கள் பறிமுதல்; 9 பேர் கைது!

32


கன்னியாகுமரி: கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இறைச்சிக் கழிவுகள், உணவுக் கழிவுகளை ஏற்றி வந்த 5 வாகனங்கள் தனிப்படை பறிமுதல் செய்தது. இது தொடர்பாக 9 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து, ஆபத்தான மருத்துவக் கழிவுகள், திருநெல்வேலி மாவட்டம் கொடகநல்லுார், பழவூர் கிராமங்களில் உள்ள பட்டா நிலங்கள், நீர்நிலைகளில் கொட்டப்பட்டுள்ளன.கடந்த சில மாதங்களாக இதுபோல குப்பைகள் கொட்டப்படுவதாகவும், சில நாட்களில் அதை எரித்து விடுவதாகவும், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.



பின்னர் இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. பின்னர் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு படி, கேரளா அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து கழிவுகளை லாரிகளில் ஏற்றி சென்றனர். இதற்கிடையில், 'கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க தனிப்படை அமைத்து, தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.



அதன் படி தனிப்படை எல்லையில் மருத்துவ கழிவுகள் உட்பட குப்பைகள் ஏதும் கொட்டப்படுகிறதா? என்பதை கண்காணித்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.,09) கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இறைச்சிக் கழிவுகள், உணவுக் கழிவுகளை ஏற்றி வந்த 5 வாகனங்கள் தனிப்படை பறிமுதல் செய்தது. இது தொடர்பாக 9 பேரைக் கைது செய்து, தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement