இண்டியா கூட்டணியை விட்டு வெளியேறலாம் ; காங்.,Vs ஆம் ஆத்மி குறித்து உமர் அப்துல்லா நச் பதில்

5


புதுடில்லி: இண்டியா கூட்டணியில் எந்தவித காலக்கெடுவும் கிடையாது. ஒருவேளை பார்லிமென்ட் தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தால், அதில் இருந்து வெளியேறி கொள்ள வேண்டியது தான் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


டில்லி சட்டசபைக்கு வரும் பிப்.,5ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஓட்டு எண்ணிக்கை வரும் பிப்.,8ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆம்ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவி வருகிறது.


கடந்த பார்லிமென்ட் தேர்தலில் இண்டியா கூட்டணி என்ற பெயரில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனால், டில்லி சட்டசபை தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள், காங்கிரசை தனித்து விட்டு விட்டன. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது இண்டியா கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களை அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வரும், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.


அவர் கூறியதாவது: டில்லி தேர்தலில் நிலவும் மும்முனை போட்டி குறித்து கருத்து கூறுவற்கு ஏதுமில்லை. ஏனெனில், டில்லி தேர்தலில் எங்களின் பங்களிப்பு இல்லை. இண்டியா கூட்டணியில் எந்தவித காலக்கெடுவும் கிடையாது. துரதிஷ்டவசமாக, இண்டியா கூட்டணி கூட்டம் ஏதும் நடைபெறவில்லை.
இதனால், கூட்டணியில் யார் இருக்கிறார்கள், தலைமை பொறுப்பு யாருக்கு, கொள்கை உள்ளிட்டவற்றில் தெளிவில்லை. ஒருவேளை பார்லிமென்ட் தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டால், நாம் வெளியேறி கொள்ள வேண்டியது தான், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement