வேலை வாங்கித் தருவதாக மோசடி; கோர்ட்டில் ஆஜரானார் அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜரானார்.
கடந்த 2011 - 2015 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த, தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏராளமானோர் மோசடி புகார் கொடுத்தனர். போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து 2 ஆயிரம் பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உள்பட 150 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பிப்ரவரி 20ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அடுத்த 150 பேருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.