இளையாத்தங்குடியில் தேரோட்டம்

கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.13 ல் நடராஜருக்கு தேரோட்டம் நடைபெறும்.

கைலாசநாதசுவாமி -நித்தியகல்யாணி அம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் 10 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. 8 ம் நுாற்றாண்டு முதல் நடைபெறும் இந்த விழாவில் தேரோட்டத்துடன் நிறைவடையும், ஜன.4ல் மாணிக்கவாசகர்,நடராஜருக்கு காப்பு கட்டி விழா துவங்கியது.

மறுநாள் முதல் தினசரி மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்து வருகிறது. ஒன்பதாம் நாளான ஜன.12 காலை 9:00 மணிக்கு மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் புறப்பாடும், மாலை 6:00 மணிக்கு ஐம்பெரும் கடவுளர் புறப்பாடும் நடைபெறும்.

ஜன.13 அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருபள்ளியெழுச்சி பூஜை நடைபெறும். தொடர்ந்து ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அபிேஷகம் நடைபெறும். காலை 9:00 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளியும், அம்பாள், மாணிக்கவாசகர் சப்பரங்களில் எழுந்தருளுவர். பின்னர் 28 கிராம நாட்டார்,நகரத்தார் பங்கேற்று தேரோட்டம் நடைபெறும்.

Advertisement